இந்தோனேசியாவை 2-வது முறையாக உலுக்கி எடுத்த சுனாமி உயிரிழந்தோர் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது
இந்தோனேசியாவை 2-வது முறையாக தாக்கிய சுனாமியில், பலியானோர் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்து உள்ளது. கடற்கரை பகுதிகளில் இருந்து குவியல், குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன. கடலோரத்தில் மரக்கிளைகளில் ஏராளமான பிணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. 160-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்கள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மீண்டும் சுனாமி
கடந்த 2004-ம் ஆண்டு, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் கடலுக்கு அடியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைகள் உருவாகி இந்தியப் பெருங்கடல் நாடுகளை தாக்கியது. இதில் இந்தோனேசியாவில் மட்டும் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அங்குள்ள பாண்டாஏசே மாகாணம் சின்னாபின்னமானது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட மற்ற நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் செத்தனர்.
இந்தப் பேரழிவில் இருந்து இந்தோனேசிய மக்கள் இன்னமும் முழுமையாக மீளாத நிலையில், அங்குள்ள ஜாவா தீவு அருகே நேற்று முன்தினம் மதியம் 1.50 மணி அளவில் கடலில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் 3 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்து கடலோரப் பகுதிகளை தாக்கியது.
கட்டிடங்கள் இடிந்தன
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில், ஜாவா தீவின் தென்கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படவில்லை. ஆனால் நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமி பேரலைகள், இந்தப் பகுதியை தாக்கி நாசத்தை ஏற்படுத்தியது.
பங்காந்தரன், தஷிக்மலாயா, சிலாகேப் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து, கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. சில இடங்களில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் அலைகள் ஊருக்குள் புகுந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டும் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுற்றுலா நகரம் தரைமட்டம்
சுற்றுலா நகரமான பங்காந்தரன் மோசமாக பாதிக்கப்பட்டது. அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரப்போகும் ஆபத்தை அறியாமல் கடற்கரை மணலில் அமர்ந்து ஆனந்தமாக பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் உள்வாங்க ஆரம்பித்தது.
இதைக் கவனித்த சிலர் உஷாராகி “சுனாமி, சுனாமி” என்று கத்தியபடி ஓட்டம் பிடித்தனர். ஆனால் பெரும்பாலானோர் இதை கவனிக்கவில்லை. இந்நிலையில் சீறி வந்த கடல் அலைகள் அவர்களை வாரிச் சுருட்டி இழுத்துச் சென்றது. கடலோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் தூக்கி எறியப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் விழுந்தன. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உயரமான கட்டிடங்கள், மரங்களில் ஏறிய சிலர் தவறி விழுந்து அலைகளின் பிடியில் சிக்கினர்.
குவியல் குவியலாக பிணம்
இந்த பயங்கர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 160 பேர் பலியானதாகவும், ஏராளமானோரை காணவில்லை என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் 2-வது நாளான நேற்று கடற்கரை பகுதிகளில் பிண வாடை வீசியது. இதையடுத்து குவியல், குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன.
பங்காந்தரனில் கடற்கரை சாலைகளில் படகுகள், பிளாஸ்டிக் சேர்கள், குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் சிதறிக் கிடந்தன. அங்குள்ள மரக்கிளைகளில் ஏராளமான பிணங்கள் தொங்கிக் கொண்டிருப்பதாக உள்ளூர் தொலைக்காட்சி சேனல் தெரிவித்தது.
சுனாமி தாக்கிய பகுதிகளில், இந்தோனேசிய ராணுவத்தினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
பலி 340 ஆனது
இந்நிலையில், சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்து உள்ளது. இதில் பங்காந்தரனில் மட்டும் 172 பேர் உயிரிழந்தனர். சிலாகேப் மாவட்டத்தில் 80 பேரும், மற்ற பகுதிகளில் 13 பேரும் அலைகளில் சிக்கி செத்தனர். தாஷிக்மலாயா என்ற இடத்தில் 44 பேர் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 510 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மீட்கப்பட்ட பிணங்கள் அனைத்தும் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, ஆஸ்பத்திரிகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அங்கு ஒரே மரண ஓலமாக உள்ளது. உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.
ஆஸ்பத்திரியில் நெருக்கடி
ஆழிப்பேரலைகளில் இருந்து உயிர் தப்பியவர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது தவிர கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சுனாமி மற்றும் நில நடுக்கத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்சுகள் விரைந்த வண்ணம் உள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க யோக்யகர்த்தா உள்ளிட்ட மற்ற பகுதிகளில் இருந்து டாக்டர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும் விரைந்து உள்ளனர்.
160 பேர் மாயம்
சுனாமிக்குப் பிறகு 160-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் உறவினர்களை பறிகொடுத்தவர்கள், கடற்கரை பகுதிகளில் அவர்களை தேடி அலைவது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இதனால் கடற்கரை பகுதிகளில் ஒரே அழுகுரலாக உள்ளது.
மகனை பறிகொடுத்த பாசிரில் என்ற கிராம வாசியும், அவரது மனைவியும் மகனை தேடி அலைந்தனர். சொத்துக்கள் போனது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் மகனை கடவுள் திருப்பிக் கொடுத்தால் போதும் என்று அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
உயிர் பலி உயரும்
இதனிடையே, சுனாமி போன்ற சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காணாமல் போனவர்கள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று இந்தோனேசிய துணை ஜனாதிபதி ஜுசூப் கல்லா தெரிவித்தார்.
உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவம், உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை செய்து கொடுக்க முன்னுரிமை தரப்படும். இதன் பிறகு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் பாண்டேஏசே அடியோடு அழிந்ததைப் போல தற்போது நிலைமை மோசமாக உள்ளதாக ரூடி சுப்ரியத்னா என்ற எம்.பி. கூறினார். சுனாமி தாக்கியதும் ஆயிரக்கணக்கானோர் மசூதிகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் புகுந்ததாக அவர் தெரிவித்தார்.
சோகம்
இந்தோனேசியாவை 2-வது முறையாக தாக்கிய சுனாமியால் ஏராளமானோர் உயிரிழந்து இருப்பது அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
எனினும் இந்த 2-வது சுனாமியால், மற்ற நாடுகளில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.