கேளம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் அக்காள் கணவருடன் பெண் தற்கொலை..!!
கேளம்பாக்கத்தை அடுத்த சிறுசேரி பழைய மாமல்லபுரம் சாலை ஐ.டி. சிப்காட் நுழைவுவாயிலில் எதிரில் தனியார் மூன்று நட்சத்திர ஓட்டல் உள்ளது.
இதில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அத்வைத் மேனன் (வயது 30) என்பவர் தனது உறவினரான லட்சமி மேனன் (25) என்பவருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.
நேற்று மாலை 5 மணியளவில் அத்வைத் மேனன் தான் தங்கியிருந்த அறையை காலி செய்யவேண்டும். நீண்ட நேரம் ஆகியும் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் ஓட்டல் ஊழியர்கள் அறையில் உள்ள இண்டர்காமிற்கு போன் செய்துள்ளனர். போனை எடுக்காததால் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியுள்ளனர்.
நீண்டநேரம் தட்டியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிர்வாகத்தினர் மாற்றுச்சாவி மூலம் அறைக்கதவை திறந்து பார்த்தபோது கட்டிலில் அருகருகே இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஆம்புலன்சிற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்– இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்மந்தப்பட்ட ஓட்டலுக்கு விரைந்து சென்றனர். அறையில் தங்கியிருந்த இருவரும் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி போலீசார் ஓட்டல் நிர்வாகத்தினர், மற்றும் ஊழியர்களிடம் இருவரும் தங்கிய விவரம், எங்கேயாவது வெளியில் சென்றுவிட்டு வந்தனரா? என விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆன்–லைன் மூலமாக 1 நாள் மட்டும் அறை முன்பதிவு செய்து இருவரும் இங்கு வந்து தங்கியது தெரிய வந்தது. மேலும் அறையிலிருந்து ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட இரண்டு கடிதம், மாத்திரை அட்டைகள், 2 செல்போன், கைப்பை, ருத்திராட்ச மாலை உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் அத்வைத் மேனனுடன் தங்கியிருந்தது அவருடைய மைத்துனி என தெரியவந்தது.
அத்வைத் மேனனின் மனைவி பார்வதி மேனன் கடந்த 38 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அதைக் கேட்ட அதிர்ச்சியில் பார்வதி மேனனின் தாயாரும் இறந்து விட்டதாகவும், இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிலிருந்து உறவினர்களுக்கு கூட சொல்லாமல் சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.
வெவ்வேறு இடங்களில் சுற்றி விட்டு கடைசியில் இந்த நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்தது.
கடிதத்தில் அத்வைத் மேனன் தன்னுடைய மனைவி இறந்து விட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்வதாகவும், சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும், லட்சுமி மேனன் எழுதிய கடிதத்தில் தன்னுடைய அக்காவும், அம்மாவும் இறந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இருவரும் இறந்தது பற்றி கேரளாவில் உள்ள அவர்களுடைய உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
உண்மையிலேயே இருவரும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது அவர்களுக்குள் ஏதாவது தவறான உறவு இருந்ததா?
இருவரும் சென்னைக்கு வந்து தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து நட்சத்திர ஓட்டல் மேலாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating