சொத்துக்காக பெற்ற மகளையே கள்ளக் காதலன் மூலமாக கடத்திய தாய்…!

Read Time:6 Minute, 40 Second

சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 19ம் திகதி கடத்தப்பட்ட இலங்கைப் பெண் மீட்கப்பட்டுள்ளார். சொத்திற்காக பெற்ற தாயே மகளைக் கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இலங்கை வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்தவர். அவரது தம்பி ஜோசப். இவரது மகளான மெரினா சுபேதினி (வயது 21), இலங்கையில் இருந்து வந்து பெரியப்பா வீட்டில் தங்கி உள்ளார். மேலும் சென்னையில் ஆங்கில பயிற்சி வகுப்புக்கும் சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 19ந் திகதி அன்று காரில் வந்த ஒரு மர்ம கும்பல் மெரினாவை கடத்திச் சென்றது. மெரினாவுடன் வந்த அவருடைய பெரியப்பா மகன் விமல்ராஜையும் தாக்கிவிட்டு சென்றனர். வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகே பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் குறித்து அண்ணாநகர் பொலிஸ் துணைக்கமிஷ்னர் ஜெயகௌரி தலைமையிலான தனிப்படை பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் ராஜேந்தினிடம் விசாரித்த போது, சம்பவத்தன்று காலை இலங்கையிலிருந்து மெரினாவின் தாய் திருமதி ஜோசப் புஸ்பமணி (வயது 36) தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. மேலும், அவர் மெரினா வகுப்புக்கு செல்லும் நேரம், பாதை போன்ற விபரங்களையும் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பொலிசார், இலங்கையில் உள்ள புஸ்பமணியை தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு பதிலளித்த அவர், தனது மகளை தேட வேண்டாம் என்றும் தனது மகள் அவளுடைய காதலன் குடும்பத்தில் பத்திரமாக இருப்பதாகவும் பொலிசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. எனவே மெரினாவின் செல்போன் எண்ணை வாங்கி, செல்போன் நிறுவனத்தின் உதவியோடு கண்காணித்தனர். அப்போது கண்காணிப்பு கருவியில் கோயம்பேடு, போரூர், வடபழனி ஆகிய இடங்களை மாறி மாறி காட்டியது. இதனால் இந்த பகுதியில் இரவு பகலாக பொலிசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மெரினாவை கடத்திச் சென்ற கார் சிக்கியது. அதை மடக்கிய பொலிசார், அதில் இருந்த மெரினாவை மீட்டனார்.

மேலும் கடத்தல்காரர்களான வவுனியாவில் முச்சக்கரவண்டி வைத்து ஒட்டிப் பிழைப்பு நடத்தும் செல்வநேசன் (வயது 27) மற்றும் குரூஸ் (வயது 30), ராஜிதாஸ் (வயது 25) ஆகிய மூன்று இலங்கை வாலிபர்களை கைது செய்தனர். அதில் செல்வநேசன் வவுனியாவிலிருந்து, சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். மற்ற இரண்டு பேரும் தர்மபுரி மற்றும் செங்கல்பட்டிலுள்ள அகதிகள் முகாமில் வசித்த வருபவர்கள் என கடத்தல்காரர்களிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இச்சம்பவம் குறித்த பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

இலங்கைப் பெண் மெரினா சுபேதினியின் தந்தை வவுனியா, தோணிக்கல் பகுதியில் பலசரக்கு கடை ஒன்றை நடாத்தி வந்தவர், இவரைப் புலிகள் கடந்த ஆறு மாதத்திற்கு முன் சுட்டுக் கொன்றுவிட்டனர். அவர் இறப்பதற்கு முன்னர் தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துகளை மகள் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். ஜோசப் இறந்த பிறகு மெரினாவின் இளம் விதைவைத் தாயாரான புஸ்பமணி (வயது 36) ஆட்டோச்சாரதி செல்வநேசனுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதை மெரினா தட்டிக் கேட்ட போது சண்டை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மகளை சென்னைக்கு அனுப்பி வைத்தார். மகள் பெயரில் சொத்து இருப்பதால், அதை குறுக்கு வழியில் அடையத் திட்டமிட்டார். அதற்காக தன்னுடைய கள்ளக் காதலன் செல்வநேசனையே மகளுக்கு கட்டி வைத்து மருமகனாக்கி கொண்டால் சொத்தும் கிடைக்கும் கள்ளக் காதலனும் தன்னுடனே இருப்பான் என்று மெரினாவின் தாய் முடிவு செய்தார்.

இதை செயல்படுத்துவதற்காக கள்ளக் காதலனை சென்னைக்கு அனுப்பி, மகளை கடத்திச் சென்று திருமணம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படியே சென்னை வந்து மெரினாவை கடத்திய செல்வநேசன், பதிவு திருமணம் செய்ய முயற்சி செய்தான். ஆனால் கடத்தல் செய்தி பரபரப்பாக பேசப்பட்டதாலும் பொலிசாரின் தேடுதல் வேட்டை காரணமாகவும் பதிவு திருமணம் செய்ய முடியவில்லை.

இதையடுத்து கள்ளத்தனமாக இலங்கை செல்ல நடந்த முயற்சியும் பலிக்கவில்லை. எனவே வெளி மாநிலத்திற்கு சென்று திருமணம் செய்வதற்காக சென்னை, கோயம்பேடு பகுதிக்கு வந்த போது பொலிசாரிடம் சிக்கி விட்டனர். கடத்தல்காரர்கள் அளித்த வாக்குமூலம் உண்மையானதுதானா? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடாத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தற்போது சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மற்ற குரங்குகளை “போட்டு தாக்கியதால்’ சிறை தண்டனை அனுபவிக்கிறது “பின்டூ”
Next post பிரான்ஸில் துக்ளக் இதழுக்கு தீவைத்து மகிழ்ந்த புலிப்பினாமிகள்..!