மிஸ்டு காலில் காதலித்த தேனி பெண் கொலை: அழகாக இல்லாததால் தீர்த்து கட்டியது அம்பலம்…!!
ஒர்க்ஷாப் வேலை முடிந்து வீடு திரும்பிய செல்வம் தனது செல்போனில் பதிவாகி இருந்த மிஸ்டு காலை பார்த்ததும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.
இனிமையான பெண்ணின் குரல் காந்தமாய் இழுத்தது!
அழகான மனைவி, அன்பான குழந்தையுடன் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டிக்கொண்டிருந்தார் செல்வம். வேலைக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கோவை பீளமேடுக்கு சென்றார். அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார்.
தனிமையில் இருந்தவருக்கு இனிமையான பெண் குரலை கேட்டதும் இதயத்தில் பட்டாம்பூச்சி பறக்க தொடங்கி விட்டது.
அதன் பிறகு அடிக்கடி நிகழ்ந்த போன் உரையாடல் காதலாக உருவெடுத்தது.
மிஸ்டு காலில் சிக்கியவர் அரக்கோணத்தை சேர்ந்த சத்யா. இருபத்தைந்து வயதே நிரம்பிய சத்யாவுக்கு திருமணம் ஆகவில்லை. தேனியை சேர்ந்த இவர் அரக்கோணத்தில் தங்கி இருந்து காப்பகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
சத்யாவின் காந்தக்குரலால் நிச்சயம் அவள் ஒரு கந்தர்வ தேவதைபோல்தான் இருப்பாள் என்பது செல்வத்தின் கணக்கு.
எனவே அவரை கணக்கு பண்ணுவதற்காக தானும் திருமணம் ஆகாத வாலிபர்தான் என்று ஒரு அப்பட்டமான பொய்யை சொல்லி காதலின் நெருக்கத்தை இறுக்கமாக்கி கொண்டார்.
பேசி பேசியே வளர்த்த காதலை நேரில் ரசிக்க செல்வத்துக்கு ஆசை வந்தது. ‘எத்தனை நாள்தான் இப்படி போனில் பேசியே என்னை மயங்க வைப்பாய். உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது வா’, என்று அழைத்தார்.
காதலனின் அன்பு கட்டளையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் சத்யாவும் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு பஸ் ஏறினார்.
காதலை ருசிக்க, காதலியை ரசிக்க ஆசையுடன் காத்திருந்த செல்வம் சத்யாவை வரவேற்க ஓடினார்.
வேகமாக சென்ற கால்கள் சத்யாவை பார்த்ததும் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் பிடிக்க ஆயத்தமானது. காரணம், சத்யாவை பற்றி செல்வம் மனதுக்குள் வடித்து வைத்திருந்த உருவத்துக்கும் நேரில் பார்ப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம். பேரழகியாக இருப்பாள் என்று நினைத்தோமே அழகியாக கூட இல்லையே என்று தன்னைத்தானே நொந்து கொண்டார்.
இருப்பினும் ஓசியில் கிடைப்பதை சும்மா விடுவானேன் என்று நைசாக பேசி கோவையில் பல இடங்களுக்கும் அழைத்து சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அதன்பிறகு அவரை கைகழுவ நினைத்த செல்வம் தனக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கும் விவரத்தை தெரிவித்துள்ளார்.
அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சத்யா, வாழ்க்கையை தொலைத்துவிட்டேன். இனி வாழ்ந்தால் உன்னோடு தான் வாழ்வேன். என்னையும் திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தினார்.
எப்படியோ சந்தித்தோம். பழகினோம். இதோடு நம் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம் என்று சமாதானம் செய்தார். ஆனால் சமாதானம் அடையாத சத்யா என்னை மனைவியாக்காவிட்டால் போலீசுக்கு போவேன் என்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு மூண்டது.
அதுவரை ஆசை தீர அனுபவித்த செல்வம் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். வருடிவிட்ட கையாலேயே சுத்தியலால் தலையை அடித்து நொறுக்கினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சத்யாவின் கழுத்தை கியாஸ் டியூப்பால் நெரித்து கொலை செய்தார்.
பிணத்தை வீட்டுக்குள்ளேயே போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார். தகவல் அறிந்து பீளமேடு போலீசார் சென்று பார்த்த போது அரைநிர்வாண கோலத்தில் சத்யாவின் உடல் அழுகிபோய் கிடந்தது.
போலீஸ் விசாரணையின் போது செல்வத்துடன் ஒரு பெண் தங்கி இருந்ததை பார்த்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
அதை கேட்டதும் போலீசாருக்கு பொறி தட்டியது. கொலைகாரன் செல்வம்தான் என்பதை உறுதி செய்து அவரை வலைவீசி தேடி வந்தார்கள்.
ஆனால் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை போலீசார் அடையாளம் காணமுடியாமல் திணறினார்கள். அப்போது செல்வம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஒரு செல்போன் ‘மெமரி’கார்டு போலீசாரிடம் சிக்கியது.
அதை ஆய்வு செய்த போது அதில் இருந்த ஒரு பெண் படத்தை பார்த்து அந்த பெண்தான் செல்வத்துடன் இருந்ததாக வீட்டு உரிமையாளர் உறுதிபடுத்தினார்.
உடனே போலீசார் அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டனர். அடையாளம் தெரிந்து யாராவது வருவார்கள் என்று காத்திருந்த போலீசுக்கு அந்த புகைப்படத்தில் இருந்த பெண்ணே போன் செய்தார். அப்போது ‘சார், நான் அரக்கோணத்தில் உயிரோடு இருக்கிறேன்’ என்றார். அதை கேட்டதும் போலீசாருக்கு தூக்கிவாரிப் போட்டது.
புகைப்படம் மாறிவிட்டதை தெரிந்து வருத்தம் தெரிவித்தனர். இதற்கிடையில் வெளியான புகைப்படத்தை பார்த்ததும், நாம் இவளை கொல்லவில்லை. இனி போலீசார் நம்மை கண்டுபிடிக்க போவதில்லை என்ற நம்பிக்கையில் செல்வம் கரூரில் பதுங்கி இருப்பதை போலீசார் மோப்பம் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செல்வம், சத்யாவிடம் பழகி, கொலை செய்த விவரத்தை கூறினார். இன்று மாலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செல்வம் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
தேனியில் பிறந்து… அரக்கோணத்தில் வாழ்ந்து… கோவையில் சத்யா வாழ்க்கையை இழக்க வைத்தது ஒரு ‘மிஸ்டுகால்’.
மிஸ்டு காலில் பெண்களே உஷார்.
Average Rating