வீட்டின் நடுவில் உலகத்தின் திரை: தொலைக்காட்சி தினம்…!!
எல்லா தினங்களை பற்றிய விழிப்புணர்வுக்கும் தொலைக்காட்சி பயன்படுத்தப்படுகிறது.
அதனால், தொலைக்காட்சி பற்றி விழிப்புணர்வு செய்ய தேவையில்லை.
வேண்டுமானால், தொலைக்காட்சியை மக்கள் குறைவாக பயன்படுத்தி, திரையிலிருந்து திரும்பி கொஞ்சம் நிஜ உலகை கவனிக்க வைக்கலாம்.
ஐ.நா. பொதுசபை 1996 ல் முதன் முதலாக தொலைக்காட்சி தினமாக நவம்பர் 21 ம் திகதியை அறிவித்தது.
இதற்கான கூட்டம் ஜேர்மனியில் நடந்தபோது. 11 நாடுகளை சேர்ந்த குழுவில் எதிர்ப்பு கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டது.
உலக பத்திரிகை சுதந்திர தினம், உலக தொலை தொடர்பு தினம், உலக தகவல் அபிவிருத்தி நாள் என ஏற்கனவே இந்த துறையில் 3 தினங்கள் உள்ள போது, 4 வது ஒரு தினம் தேவையா என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
அப்படி ஒரு ஊடக கருவியை தினமாக கொண்டாடுவது என்றால் அதற்கு எல்லோர் வீட்டிலும் இருக்கும் வானொலியை தெரிவுசெய்யலாம் என்ற எதிர் கருத்தும் முன்வைக்கப்பட்டது.
ஆனாலும், ஒளியும் ஒலியுமான தொலைக்காட்சியையே கொண்டாட வேண்டும் என்று இறுதியில் தெரிவு செய்யப்பட்டது. 1996 ல் குறைவான வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தாலும் இப்போது தொலைக்காட்சி இல்லாத வீடில்லை என்ற அளவில் வியாபித்துள்ளது.
எல்லோர் மோகத்துக்கும் உரிய சினிமா எந்த காலத்திலும் ஒரு வீழ்ச்சியை சந்திக்குமா என்ற சந்தேகம் முன்பு இருந்தது. இப்போது சினிமா பிழைக்குமா என்ற பீதி அதை நம்பியிருப்பவர்களுக்கு வந்துள்ளது, காரணம் தொலைக்காட்சி.
வெள்ளித்திரைக்கு போட்டியாக இந்த புள்ளித்திரை வந்தாலும் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால் இரட்டைக்குழல் துப்பாக்கியாகவே சமுதாயத்தை ஆட்டிப்படைக்கிறது.
வீட்டுக்குள் உலகின் அவதாரமாக வந்து வீற்றிருக்கிறது தொலைக்காட்சி. செய்திகள், சினிமா, தொடர் நாடகங்கள், பாடல்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அறிவுப்பூர்வமான தகவல்கள், பட்டிமன்றம், பிரபலங்களின் பேட்டிகள் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புபிடிக்குள் வைத்திருக்கிறது.
முன்பு கல்லாதவர்கள் ஏதும் அறியாதவர்களாகவே இறுதிவரை வாழ்ந்துவிட்டு செல்வர். தொலைக்காட்சி பிரவேசத்துக்கு பிறகு, படித்தவர்களுக்கு நிகரான உலகை பற்றிய ஒரு புரிதல் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
பாமரர் படித்து தெரிந்துகொள்ள முடியாத பல விடயங்களை, செவிவழி செய்தியாக, காட்சியாக விளக்கும் கல்விக்கூட பணியும் செய்கிறது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், பெரிய அறிவியல் சாதனமான இந்த தொலைக்காட்சி ஆயுதமாகாதா. இதை பயன்படுத்தி நாடறிய பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு.
ஊடகத்தால் பிரபலங்கள் அதிகரித்தனர், அதனால், அவர்களிலும் நேற்றைய பிரபலங்கள், இன்றைய பிரபலங்கள் என நிலைமாறும் வேகம் வந்துவிட்டது.
தொலைக்காட்சி தொலையாது, அப்படி தொலைந்தால் பதிலாக வருவது அதன் வளர்ச்சியாகவே இருக்கும். இது திரை உலகமல்ல, உலகத்தின் திரை.
Average Rating