திருப்பூரில் இளம்பெண்ணுக்கு 2 பேர் போட்டி: டெய்லருக்கு கத்திக்குத்து…!!
தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் திருப்பூர் அருகே உள்ள முருகம்பாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனிக்கு டெய்லராக வேலைக்கு சென்று வந்தார். அங்கு தர்மபுரியை சேர்ந்த தேன்மொழி (வயது 23) சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
அவருடன் சதீஷ்குமார் நட்பாக பழக ஆரம்பித்தார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். தேன்மொழி திருப்பூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். தனியாக இருந்த தேன்மொழியின் வீட்டுக்கு சதீஷ்குமார் அடிக்கடி சென்று வந்தார். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு இருவரும் தனியாக சென்று வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் வேலை பார்த்த நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை பார்த்து வந்த போடிநாயக்கனுரை சேர்ந்த சரவணன் (28) தேன்மொழியிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சரவணன் தனது காதலை தேன்மொழியிடம் வெளிப்படுத்தினார்.
தேன்மொழியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் சதீஷ்குமாருடனான தொடர்பை துண்டித்து விடும்படியும் அறிவுறுத்தினார். இதையடுத்து தேன்மொழி தனது காதலனான சதீஷ் குமாரை சந்தித்து சரவணன் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்
மேலும் தானும் சரவணனையே விரும்புவதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளதால் தன்னை மறந்து விடும்படி சதீஷ்குமாரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் காதலியை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் தேன்மொழி காதலனின் சமாதானத்துக்கு உடன்படவில்லை. இந்த நிலையில் காதலியை மறக்க முடியாமல் அவதிப்பட்ட சதீஷ்குமார் நேற்று இரவு 10 மணிக்கு தேன்மொழியின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு தனியாக இருந்த தேன்மொழியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது அங்கு சரவணன் வந்தார்.
அவர் தேன்மொழியும், சதீஷ்குமாரும் வீட்டுக்குள் தனியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேன்மொழியிடம் சண்டை போட்டார். இன்னும் சதீஷ் குமாரின் தொடர்பை துண்டிக்கவில்லையா? என தேன்மொழியிடம் கேட்டார்.
அப்போது அங்கு இருந்த சதீஷ்குமார் என் காதலியை அபகரித்துவிட்டு என்னை மறக்க சொல்கிறாயா? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது சதீஷ்குமார் அங்கு கிடந்த கட்டையை எடுத்து சரவணனின் தலையில் தாக்கினார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் தாக்கினர். அந்தசமயத்தில் சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினார். ரத்தவெள்ளத்தில் சதீஷ் குமார் தரையில் சரிந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சதீஷ்குமாரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சதீஷ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சதீஷ்குமாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சரவணனை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating