வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்குகளில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தூக்கு: சுப்ரீம் கோர்ட்டு..!!
வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அலி ஆசான் முகமது முஜாகித் (வயது 67). மற்றொரு எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி (66). இவர்கள் இருவரும் முந்தைய கலீதா ஜியா மந்திரிசபையில் மந்திரி பதவி வகித்தவர்கள்.
1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப்போரின்போது, இவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள். பாகிஸ்தானுக்கு போரில் தோல்வி நிச்சயம் என்றான நிலையில், வங்காளதேசத்தில் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு, படுகொலைக்கு ஆளான சம்பவங்களை இவர்கள் திட்டமிட்டு, அரங்கேற்றி செயல்படுத்தினார்கள்.
இது தொடர்பாக பிரதமர் ஷேக் ஹசினா, 2010-ம் ஆண்டு போர்க்குற்ற விசாரணை நடத்த உத்தரவிட்டார். சர்வதேச குற்ற தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன.
அலி ஆசான் முகமது முஜாகித், சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோர் மீது டாக்காவில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விசாரணை, சர்வதேச தரத்தில் அமையவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குறை கூறின. ஆனால் வங்காளதேச அரசு அதை மறுத்தது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர். அலி ஆசான் முகமது முஜாகித் மீதான மரண தண்டனை கடந்த ஜூன் மாதமும், சலாவுதீன் காதர் சவுத்ரி மீதான மரண தண்டனை கடந்த ஜூலை மாதமும் உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், இருவரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்கா தலைமையிலான 4 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். இது இறுதி தீர்ப்பாக அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்து விடாதபடி தடுக்கும் வகையில் டாக்காவில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை அடுத்து இருவரும் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என வங்காளதேசத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
தீர்ப்பு பற்றி இருவர் சார்பிலும் ஆஜராகி வாதிட்ட மூத்த வக்கீல் கான்த்கெர் மகபூப் உசேன் கருத்து தெரிவிக்கையில், “இருவர் மீதான மரண தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து விட்ட நிலையில் இனி அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கமும், தண்டனை பெற்றவர்களும்தான் இது குறித்து சிந்திக்க வேண்டும். அரசு விரும்பினால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம். தண்டிக்கப்பட்டிருப்பவர்கள், ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்யலாம்” என்றார்.
சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு பற்றி அட்டார்னி ஜெனரல் மகபுபே ஆலம் கருத்து கூறும்போது, “இருவரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இனி அவர்களை தூக்கில் போடுவதற்கு சட்டப்பூர்வமாக எந்தவொரு தடையும் இல்லை” என குறிப்பிட்டார்.
Average Rating