உடல் பருமனால் பிரிட்டனில் 2000 பேர் வேலைஇழப்பு * நிதி பெறுவதற்காக நாடகம்?

Read Time:6 Minute, 10 Second

grossb1.gifபிரிட்டனில் அதிக பருமன் உள்ள இரண்டாயிரம் பேர் வேலை பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நடத்த ரூ. 35 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், வேலை தேடுவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதே போல, உடல்ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, வேலையை தொடர முடியாத நிலையில், இருப்பவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதை துஷ்பிரயோகம் செய்வதாக ஒரு புறம் குற்றச்சாட்டு இருந்தாலும், அரசியல் ஆதாயத்துக்காக இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடல் நிலை காரணமாக வேலை பார்க்க முடியாத 27 லட்சம் பேருக்கு, கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 59 ஆயிரத்து 200 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டிலிருந்து, பிரிட்டனுக்கு வேறு நாட்டில் இருந்து குடிபெயர்ந்த 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதை பிரிட்டனை சேர்ந்தவர்களுக்கு கொடுக்காதது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னாள் சமூக பாதுகாப்புத் துறை அமைச்சர் பிராங்க் பீல்டு, வேலை பார்க்க விரும்பாமல் வீட்டில் இருக்க விரும்புவோர், இத்திட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டி உள்ளார். உடல் ரீதியாக பாதிக்கப் பட்டவர்கள், இத்திட்டத்தால் பயன்பெறுவதை எதிர்க்காவிட்டாலும், இதை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதாக அவர் கூறுகிறார்.

இத்திட்டத்தின் கீழ் 1979ம் ஆண்டு பயன் பெற்றவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால், சமீப ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சத்துக்கு மேற்பட்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். கடந்த 1995ம் ஆண்டு இது போல பயன்பெற்றோரில், மன ரீதியாக பாதிக்கப்பட்டதாக பயன்பெற்றோர் வெறும் 20 சதவீதம் தான். தற்போது இது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது போன்ற ஒப்பீடுடன் கூடிய புள்ளி விவரங்களையும் முன்னாள் அமைச்சர் பிராங் பீல்டு வெளியிட்டார்:

புள்ளி விவரங்கள் : கடந்த 10 ஆண்டுகளில், மனஅழுத்தம், தலைசுற்றல், மயக்கம் போன்ற காரணங்களுக்காக, வேலை பார்க்க தகுதி இழந்ததாக கூறி பயன்பெறுவோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்தள்ளது. உணரக் கூடிய நோய்களால் தான் முன்னர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர். தற்போது, உணர முடியாத நோய்களைக் கூறி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டில் மன ரீதியான பிரச்னைகளை கூறி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றோருக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.16 ஆயிரம் கோடி. இதில் குறிப்பிட்டு சொல்ல முடியாத அல்லது தெரியாத நோய் காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என்று பயன்பட்டோருக்கு வழங்கப்பட்ட தொகை மட்டும், ரூ. நான்காயிரத்து 140 கோடி. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது ரூ. எட்டாயிரத்து 800 கோடி. மனக்கவலையால் வேலை பார்க்க முடியவில்லை என்று கூறிய 1.16 லட்சம் பேருக்கு ரூ. 22 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேருக்கு ரூ.976 கோடி வழங்கப்பட்டுள்ளது. மன உளைச்சல் மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 600 பேரும், தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட எட்டாயிரத்து 100 பேரும் பயன்பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் பயன்பெற்றோரில், தலைவலியை காரணமாக கூறியோர் நான்காயிரம் பேர், ஒற்றை தலைவலியை காரணமாக கூறியோர் இரண்டாயிரத்து 700 பேர், சாப்பிடும் போது ஏற்படும் உடல் பிரச்னையை காரணமாக கூறியோர் ஆயிரத்து 890 பேர். முகப்பருவையும், நகப்பிரச்னைகளையும் காரணமாகக் கூறிய 120 பேருக்கு ரூ.80 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குமட்டல் மற்றும் வாந்தி பிரச்னைக்காக 900 பேருக்கு ரூ. 1.6 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிராங் பீல்டு தெரிவித்துள்ளார்.

ஆனால், வெறுமனே டாக்டர்களின் பரிசோதனை அறிக்கை அடிப்படையில், இவர்களுக்கு பயன்கள் அளிக்கப்படவில்லை என்றும் டாக்டர்கள் குழுவினரால் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகே வழங்கப்படுவதாகவும், பணியாளர் மற்றும் ஓய்வூதியத்துறை செயலர் பீட்டர் ஹெய்ன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் இருந்த புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் பிணையில் விடுதலை
Next post 10 நிமிடத்தில் வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு, ஆண்களுக்கு புது அறுவை சிகிச்சை