இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு லெபனானில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருவதால் அங்கு தங்கி இருக்கும் அமெரிக்கர்கள், பிரிட்டிஷார், பிரஞ்சுக்கள் ஆகியோர் லெபனான் நாட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அமைதிப்படையைச் சேர்ந்த இந்திய வீரர் ஒருவர் காயம் அடைந்தார். ஹமாஸ் எனப்படும் பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை கடத்தியதைத் தொடர்ந்து, அவரை விடுவிப்பதற்காக இஸ்ரேல் காசா நகருக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது. அந்த நகரின் மீது போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின.
பிறகு அண்டை நாடான லெபனானில் ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட் நகரின் மீது விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று 6-வது நாளாக விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இதன் காரணமாக அந்த நகரத்தில் வசித்து வரும் வெளிநாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வருகிறார்கள். அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் முக்கியத்துவம் இல்லாத ஊழியர்கள் 21 பேரை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர் லெபனானில் இருந்து சைப்ரஸ் சென்றது. அங்கு அவர்கள் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பிரான்சும் அந்த நாட்டில் வசிக்கும் தன் நாட்டு மக்களையும், இதர ஐரோப்பியர்களையுமாக 2 ஆயிரம் பேரை லெபனானில் இருந்து வெளியேற்ற தீர்மானித்து உள்ளது. இதற்காக ஒரு கப்பலை அது வாடகைக்கு எடுத்து உள்ளது. பிரான்சு மேலும் ஒரு கப்பலை நார்வே நாட்டிடம் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளது. இந்த கப்பல் மூலம் மேலும் 650 பேரை வெளியேற்ற உள்ளது. இவர்கள் அனைவரும் சைப்ரஸ் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
லெபனான் பிரான்சு நாட்டின் முன்னாள் காலனி நாடு ஆகும். அதனால் அங்கு 17 ஆயிரம் பிரஞ்சு மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் 4 ஆயிரம் பேர் அந்த நாட்டுக்கு சுற்றுலா பயணிகளாக வந்து உள்ளனர்.
இத்தாலி நாடும் தன் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்காக போர்க்கப்பல் ஒன்றை லெபனான் நாட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளது. இங்கிலாந்து நாடும் 2 கப்பல்களை லெபனான் நாட்டுக்கு அனுப்பி உள்ளது. கிட்டத்தட்ட 4 ஆயிரம் பிரிட்டிஷாரையும், இரட்டைக்குடி உரிமை பெற்ற 10 ஆயிரம் பேரையும் வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கனடா நாட்டினர் 16 ஆயிரம் பேர் லெபனானில் இருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றுவதற்காக கப்பல்களை வாடகைக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
6-வது நாளாக நேற்று நடந்த விமான தாக்குதலில் 9 லெபனானியர்கள் பலியானார்கள். லெபனானில் உள்ள திரிபோலி அப்தேக் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இதில் 9 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
லெபனானில் எல்லை கிராமமான ஹவுலாவில் ஐ.நா.வின் அமைதிப்படை நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர். அவர்களில் ஒரு இந்தியர் இஸ்ரேல் விமான தாக்குதலில் காயம் அடைந்தார். உடனே சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார்.
காசா நகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் பாலஸ்தீன வெளிநாட்டு அமைச்சரகத்தின் 8 மாடி கட்டிடம் தரைமட்டமானது. காசாவில் இது வரை நடந்த தாக்குதலில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.