சென்னையில்.. அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 49) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
உள் பிரச்சனைகள்: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் 1985ம் ஆண்டின் மத்தியில் உள் இயக்கப் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன.
1982ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்குள் உள்பிரச்சனை ஏற்பட்டது.
1982இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் கொள்கைகளும், மக்கள் மத்தியிலான வேலைகளும் யாழ்-பிராந்திய கமிட்டியில் இருந்த உறுப்பினர்களால்தான் முக்கியமாக முன்னெடுக்கப்பட்டன.
இயக்கத்தின் மத்திய குழு தலைமை என்றளவில் இருந்ததே தவிர, ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தை தனித்துவமாக அடையாளப்படுத்திய அரசியல் பிரச்சார வேலைகளுக்கு வழிகாட்ட அதனால் முடியவில்லை.
இதனால் மத்திய குழுவை கடுமையாக விமர்சித்த யாழ்-பிராந்திய கமிட்டி தனித்து இயங்குவதற்கு தீர்மானித்தது.
மட்டக்களப்பு பிராந்திய கமிட்டி, வன்னிப் பிராந்தியக் கமிட்டி என்பவற்றின் ஆதரவோடு ஒரு தீாமானத்தையும் எடுத்தது.
அப்போது இயக்கத்தின் உள் இயக்கத் தொடர்பாளராக இருந்தவர் குணசேகரன். அவரது முயற்சியின் காரணமாக 1982 இல் ஏற்படவிருந்த பிளவு தடுக்கப்பட்டது.
அதனையடுத்து ஏற்பட்ட உள் பிரச்சனை 1985இன் மத்தியில்தான் தீவிரமடைந்தது.
ஈழப்போராளிகள் அமைப்புக்குள் இரண்டாம் கட்ட தலைமைத்துவம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பில்தான் பலமானதாக இருந்தது.
அது மட்டுமல்லாமல் கட்சிக்குள் கருத்து மோதல்களை துணிச்சலாக நடத்தக்கூடியளவுக்கு உட்கட்சி ஜனநாயகமும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள் தான் 1986 வரை உயிரோட்டமுள்ளதாகவும் இருந்தது.
இரண்டாம் கட்ட தலைமையே இயக்க நடவடிக்கைகளுக்கு உண்மையான தலைமைபாத்திரம் வகித்தமையால் தலைமைக்கு தன்னிச்சையான போக்குகளை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.
இந்தியாவிலும், இலங்கையிலும் இயக்கத்தின் அரசியில்-பிரச்சார நிறுவனங்களும், கட்சியின் மக்கள் அமைப்புகளும் இரண்டாம் கட்ட தலைமையின் கையில் இருந்ததும் ஒரு முக்கிய அம்சமாகும்.
இந்திய அரசுடனான தொடர்பு, இந்திய புலனாய்வு அமைப்புக்களுடனான தொடர்பு என்பவற்றை பத்மநாபா தனது கையில் வைத்துக்கொண்டார்.
தலைமையில் பிளவு
1983க்குப் பின்னர் இயக்கத்தின் ஆட்பலம் பெருகிய நிலையில் ஏற்பட்ட புதிய சூழலுக்கு தலைமையால் ஈடுகொடுக்க முடியவில்லை.
ஆட்பலம் பெருகியதோடு தலைமை திருப்திப்பட்டுக்கொண்டிருந்ததே தவிர, இயக்கத்தை புரட்சிகர கட்சியாக மாற்றும் செயல்பாட்டுக்கு தலைமை வழங்க முடியாமல் இருந்தது.
மத்திய குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் தலைமைத்துவத்திற்குரிய திறமையை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர் என்றொல்லாம், இயகத்தின் இரண்டாம் கட்டத் தலைமை விமர்சனங்களை முன்வைத்தது.
மத்திய குழுவின உறுப்பினராகவும், மக்கள் விடுதலைப் படையின் பிரதம தளபதியாகவும் இருந்த டக்ளஸ் தேவானந்தா, மத்திய குழு உறுப்பினர் செழியன் ஆகியோர் இரண்டாம் கட்டத் தலைமையின் பக்கம் நின்றனர்.
அதனால், இயக்கத்தின் இராணுவ அமைப்பும் தலைமையின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படும் என்ற நிலை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.
“மத்திய குழுவை கூட்டி நிலமையை ஆராயலாம்” என்றார் பத்மநாபா
“மத்திய குழுக் கூட்டத்தை தமிழ் நாட்டில் வைத்துக்கொண்டால் வரமுடியாது. மத்திய குழு உறுப்பினர்கள் ஈழத்துக்கு வரவேண்டும். இங்கு கூட்டத்தை நடத்தலாம். கலந்துகொள்கிறேன்” என்று சொல்லிவிட்டார் டக்களஸ் தேவானந்தா.
இதற்கிடையே ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்திய பிராந்திய கமிட்டி தலைமைக்கு எதிரான விமர்சனங்களை ஒன்றுதிரட்டி உட்கட்சிப் போராட்ட ஆவணமாகத் தயாரிக்கத் தொடங்கியது.
இந்தியாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் சகலருமே தலைமைக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஈழச் செய்தி தொடர்பு நிலைய பொறுப்பாளர் பிரேம், இந்திய பயிற்சி முகாம்களுக்கான பொறுப்பாளர் தயாபரன், இந்திய கமிட்டிச் செயலாளர் டேவிற்சன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் உளவுப்பிரிவின் தலைமைகுழுவைச் சேர்ந்தவரும், பிரச்சார வெளியீடுகளுக்கு பொறுப்பாக இருந்தவருமான ரமேஷ் , புதுடில்லியில் கட்சி வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த மகேஷ், கட்சியன் ஆங்கிலப் பத்திரிகையான ‘ஸ்போக்ஸ் மன்’ ஆசிரியர் மனோராஜசிங்கம் ஆகியோர் ஒரே குரலில் விமர்சனங்களை முன்வைத்தனர்.
மைகேல் எங்கே?
இதே காலகட்டத்தில் ஈரோஸ் அமைப்புக்குக்குள்ளும் உட்கட்சி பிரச்சனையில் முன்னின்றவர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்தவர். அவர் தீரென்று காணாமல் போனார்.
மைக்கேல் எங்கே என்று கேட்டால் தமிழ்நாட்டிலிருந்த ஈரோஸ் இயக்கத்தினர் மைகேல் ஈழத்துக்கு போய்விட்டார் என்றனர்.
இங்கு கேட்டால் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார்கள்.
மைக்கேல் உட்பட வேறு சிலரும் காதும் காதும் வைத்தாற்போல் மண்டையில் போடப்பட்டுவிட்டார்கள் என்று நம்பப்பட்டது.
ஈரோஸ் இயக்கத் தலைமையின் இந்திய அரசுக்கு ஆதாரவான போக்குத் தொடர்பாகவும் உள்ளே பிரச்சனைகள் ஏற்படத்தொடங்கின.
இயக்கங்களின் உள்பிரச்சனைகள் குறித்து இத்தோடு தற்காலிகமாக நிறுத்தின்கொண்டு மேலே தொடருவொம்…
முஸ்லிம்களின் நிலைப்பாடு
திம்புப் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு காணமுடியாமல் போனதற்கு இரண்டு காரணங்களே முக்கியமாக கூறப்பட்டன.
அரச படைகளின் போர்நிறுத்த மீறல்கள், வடக்கு-கிழக்கு இணைந்திருப்பதையோ, வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதையோ அரசாங்கம் ஏற்க மறுத்தமை என்பவையே முக்கிய காரணமாக கூறப்பட்டன.
இதற்கு தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி சொன்ன பதில் புத்திசாலித்தனமானது.
“வடக்கு- கிழக்கு இணைந்திருக்கக்கூடாது என்று அரசாங்கம் சொல்வது முஸ்லிம் மக்களுக்காகத்தான், அவர்களை அநாதரவாக்கிவிட முடியுமா? என்று தேனொழுகப் பேசினார் அத்துலத் முதலி.
லலித் அத்துலத் சொன்னதிலிருந்து ஒரு பகுதி இது…
“வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பது சாத்தியமானதல்ல. இலங்கை மட்டுமல்ல சர்வதேச நாடுகளும் அதனை ஆதரிக்கவில்லை.
கிழக்கில் வாழும் 33வீதமான முஸ்லிம் மக்களை நாம் அநாதரவாக்கிவிடமுடியாது.
எந்த இனமும் இந்த நாட்டில் பாதிக்கப்படாத வகையிலான அரசியல் தீர்வையே நாம் முன்வைப்போம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அபாயகரமான திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
வவுனியா, திருக்கோணமலை போன்ற பகுதிகளிலுள்ள முஸ்லிம் கிராமங்களில் தாக்குதல்களை மேற்கொள்ள அவர்கள் உத்தேசித்திருப்பதாக தெரிய வருகிறது.” என்று கூறியிருந்தார் அத்துலத் முதலி.
உண்மையில் அவ்வாறான ஒரு திட்டம் புலிகளிடம் அப்போது இருக்கவில்லை.
வடக்கு- கிழக்கு இணைப்புக்கு உள்ள தடையாக முஸ்லிம் மக்களை கொண்டுவந்து நிறுத்துவதே லலித்தின் திட்டமாக இருந்தது.
இதே லலித் அத்துலத் முதலிதான் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவினரை இலங்கைக்குள் கொண்டுவரக் காரணமாயிருந்தவர் என்பது மறக்க முடியாதது.
முஸ்லிம் தூதுக்குழு
“இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளும் இடமளிக்க வேண்டும்.
தமிழ் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறப்போகிறோம்”
என்று அறிவித்திருந்தார் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத்.
சென்னையில் இருந்த தமிழ் அமைப்புத் தலைவர்களைச் சந்திக்க பதியுதீன் மஹ்மூத் தலைமையில் ஆறுபேரடங்கிய குழு ஒன்று புறப்பட்டுச் சென்றது.
“வடக்கு- கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை. மாகாண சுயாட்சி ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம்.
அரசாங்கம் மாவட்ட சபை யோசனைகளை முன்வைத்தால் ஏற்கமாட்டோம்.” என்று பதியுதீன் மஹ்மூத் தெரிவித்தார்.
சிறிலகா சுதந்திரக் கட்சி ஆட்சியில் கல்வியமைச்சராக இருந்தவர் பதியுதீன் மஹ்மூத்.
புலிகள் இயக்கமும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் ரெலோ ஆகிய இயக்கங்களும் பதியுதீன் மஹ்மூத் தலைமையில் சென்ற தூதுக்குழவை சந்திக்கவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புகளோ சந்தித்து பேசியிருந்தன.
மீண்டும் முயற்சி
திம்பு பேச்சுகள் முறிவடைந்தபோதும் மீண்டும் பேசு்சுவார்த்தைகளை ஆரம்பித்துவைக்க இந்திய பிரதமர் ராஜீவ் விருப்பம் கொண்டிருந்தார்.
ஈழப் போராளி அமைப்புக்களின் தலைவாகளை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ராஜீவ் காந்தியைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்க ஈழப் போராளி அமைப்புகளது தலைவர்களும் விருப்பம் கொண்டிருந்தனா.
“போர் நிறுத்தத்தை மீறிய அரச படைகள் திருக்கோணமலையில் பொதுமக்களை வேட்டையாடிய காடசிகளை வீடியோ படமாக வைத்திருக்கிறோம். அதனை ராஜீவ் காந்தியிடம் காண்பிப்போம் ” என்று நான்கு இயக்க கூட்டமைப்பான ஈழத்தேசிய விடுதலை முன்னணி (E:N:L:F) கூறியது.
ஆனால் திம்பு பேச்சு முறியும் கட்டலிருந்தபோது, போராளி அமைப்பின் தலைவர்களை ராஜீவ் காந்தியைச் சந்திக்க வைக்க ஒரு முயற்சி நடந்தது.
போராளி அமைப்பின் தலைவர்களை சந்திக்க ராஜீவ் காந்தி நேரமும் ஒதுக்கி வைத்திருந்தார்.
காத்திருந்த விமானமும் தலைமறைவான தலைவர்களும்
சென்னையில் இருந்து அவாகளை புதுடில்லிக்கு அழைத்துச் செல்ல விசேஷ விமானம் ஓன்றும் சென்னை விமான நிலையத்தில் மூன்று நாட்களாகக் காத்திருந்தது.
ஆனால், போராளி அமைப்புகளது தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர். ராஜீவ் காந்தியை சந்தித்தால் திம்பு பேச்சைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்றே சந்திப்பை தவிர்த்துக் கொண்டார்கள்.
கருணாநிதியின் முடிவு
திம்பு பேச்சுக்கள் முறிந்தது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் பி.ரி.ஐ செய்தி நிறுவனம் கருத்துக்கேட்டது.
திரு.மு.கருணாநிதி சொன்னது இது..
“1947ல் இந்திய உபகண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட்டதைப் போன்று, இலங்கையும் இன அடிப்படையில் பிரிக்கப்படுதே ஒரேயொரு தீர்வாக அமையும்”
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சி.வீரமணி ஒரு அறிக்கையில் பின்வருமாறு சொன்னார்.
” இலஙகைத் தமிழ் மக்களின் இன்னல் தீர தனிநாடு ஒன்றுதான் சரியான தீர்வாகும்.
அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மீண்டும் இனப்படுகொலையை ஆரம்பித்துள்ளது.
இப்படியான சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து கலந்து கொள்ளும்படி தமிழர் பிரதிநிதிகளை வற்புறுத்தக்சூடாது”என்று தெரிவித்தார் சி.வீரமணி. அதனை மத்திய அரசுக்கு தெரிவித்து ஒரு தந்தியும் அடித்திருந்தார்.
சதி முயற்சி
தமிழ்நாட்டில் போராளி அமைப்புக்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதையும், தமிழகத்தில் ஏற்பட்டு வந்த ஆதரவும் இலங்கை அரசுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
சென்னையில் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த திட்டம் தயாரானது.
23.12.85 அன்று அதிகாலை 5மணியளவில் சென்னையில் ஒரு குண்டு வெடிப்பு இடம் பெற்றது.
குண்டுவெடிப்புக்கு இலக்கான வீடு புலிகள் இயக்க ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தங்கியிருந்த வீடாகும்.
இலங்கை அரசின் கையாட்கள் செய்த சதி முயற்சி என்று விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம் சாட்டியது.
குண்டை வைத்தவர் யார் என்றும் இனம் கண்டுவிட்டதாக புலிகள் கூறினார்கள்.
அவர்கள் குற்றம் சாட்டியது யாரைதெரியுமா?? கந்தசாமி நாயுடுவை.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் அமைச்சர் தொண்டமானுக்கு நெருக்கமாக தற்போதிருப்பவர்தான் கந்தசாமி நாயுடு.
புலிகள் ஏன் அவர் மீது குற்றம் சாட்டினார்கள்? அடுத்தவாரம்
Average Rating