இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறார் இம்ரான் கான் திருமணமாகி 10 மாதங்களில் அறிவிப்பு..!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான், தனது இரண்டாவது மனைவி ரெஹாம் கானை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்றுகொடுத்த அணித்தலைவரான இம்ரான் கான், கடந்த ஜனவரி மாதமே ரெஹாம் கானை (42) திருமணம் செய்திருந்தார்.
ஆனால் 10 மாதங்களுக்குள் இத்தம்பதியினர் பிரிந்துள்ளனர்.
இம்ரான் கான் (63) விவாகரத்து செய்யவுள்ளார் என அவரின் தலைமையிலான தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1972 முதல் 1992 ஆம் ஆண்டு வரை 88 டெஸ்ட் போட்டிகளிலும் 175 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடியவர் இம்ரான் கான்.
1992 ஆம் ஆண்டு உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகியமை அவரின் கிரிக்கெட் வாழ்வின் மிக உன்னதமான தருணமாக அமைந்தது.
பாகிஸ்தானின் மிகச் சிறந்த சகல துறை கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விளங்கிய இம்ரான் கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர்.
கம்பீரமான இளைஞரான இம்ரான் கானுக்கு ரசிகைகளும் மிக அதிகம். யுவதிகளின் தொல்லையிலிருந்து தப்புவதற்காக அடிக்கடி தொலைபேசி இலக்கத்தை இம்ரான் கான் மாற்றுவதாக 1980, 1990 களில் தகவல்கள் வெளியாகி யிருந்தன.
ஆனால், இம்ரான் கான் நீண்டகாலமாக திருமணம் செய்து கொள்ளாம லேயே இருந்தார்.
1995 ஆம் ஆண்டு தனது 43 ஆவது வயதில் இங்கிலாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜேம்ஸ் கோல்ட் ஸ்மித்தின் மகளான ஜெமிமா கோல்ட் ஸ்மித்தை இம்ரான் கான் திருமணம் செய்தார்.
2004 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றிருந்தனர். இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
அதன்பின் சுமார் 5 வருடங்கள் கடந்த நிலையில் 2015 ஜனவரி மாதம், ரெஹாம் கானை இம்ரான் கான் திருமணம் செய்தார்.
ரெஹாம் கான் உளவியல் நிபுணர் ஒருவரை திருமணம் செய்து 3 பிள்ளைகளுக்கு தாயாரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானிய பெற்றோரின் மகளாக லிபியாவில் பிறந்த ரெஹாமா கான், பி.பி.சி. தொலைக்காட்சி அலைவரிசையில் வானிலை அறிவிப்பாளராக பணியாற்றியவர்.
பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு திரும்பி பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டு இம்ரான் கான் ஜெமீமா கான் திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
ஆனால், கடந்த டிசெம்பர் மாதம் பெஷாவர் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உட்பட 145 பேர் கொல்லப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனது இரண்டாவது திருமண வைபவத்தை எளிமையாகவே நடத்தியதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
இம்ரான் கானும் ரெஹாம் கானும் தமது திருமணத்தின் பின்னர் தேனிலவுக்குச் செல்லாமல், அறக்கட்டளையொன்றினால் நடத்தப்படும் இஸ்லாமாபாத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றுக்கு விஜயம் செய்து அங்கு தங்கியுள்ள சிறார்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து மதிய உணவை உட்கொண்டமையும் பலரின் மனதை நெகிழச் செய்திருந்தது.
ஆனால், ஒரு வருடத் துக்கு ள்ளாகவே இத்தம் பதியின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து ள்ளது.
ரெஹாம் கான் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிட்ட டுவிட்டர் குறிப்பொன்றில், நாம் இருவரும் பிரிவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
விவாகரத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஒரு மணித்தியாலத்தின் பின்னர், “இது எனக்கும் ரெஹாமுக்கும் எமது குடும்பங்களுக்கும் மிகக் கடினமான தருணம்” என இம்ரான் கான் தெரிவித்தார்.
“ரெஹாமின் குணங்கள் மற்றும் குறைந்த வசதியுடையோருக்கு உதவுவதில் அவர் காட்டும் ஆர்வம் ஆகியவற்றுக்காக அவர் மீது நான் மிக மதிப்பு வைத்துள்ளேன் எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
Average Rating