போதையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்; சென்னை நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் அழகிகள் ஆபாச நடனம்: போலீஸ் வேட்டையில் 80 பேர் சிக்கினார்கள்
சென்னை நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் ஆபாச நடனம் ஆடிய அழகிகள் போலீசில் சிக்கினார்கள். சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன், நடன நிகழ்ச்சி நடத்த போலீசார் கடும் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளனர். இரவு 11 மணி வரை ஆபாசம் இல்லாமல் மது விருந்துடன் கூடிய நடன நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி உள்ளது. ஆனால் போலீசாரின் அனுமதியை மீறி சில நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனம் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இதனால் ஆபாச நடனம் நடக்கும் ஓட்டல்களை கண்காணிக்கும்படி போலீசாருக்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். சென்னை வடக்கு போக் ரோட்டில் உள்ள பிரபல 3 நட்சத்திர ஓட்டலில் போலீஸ் நிபந்தனையை மீறி தினமும் ஆபாச நடனத்துடன் கூத்தும், கும்மாளமும் போடுவதாகவும், இதனால் நள்ளிரவு வரை தூங்க முடியவில்லை என்றும், அந்த பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் போன் மூலம் புகார் தெரிவித்தனர்.
அதிரடி சோதனை
இதனால் அந்த ஓட்டலில் திடீரென்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தும்படி பாண்டிபஜார் போலீசாருக்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் துரைராஜ், துணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர் சைலேத்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
போலீசார் சோதனை நடத்திய போது ஆண்களும், பெண்களும் அரை -குறை ஆடையுடன் போதையில் உச்சகட்டமாக நடனமாடிக் கொண்டிருந்தார்கள். நடனமாடிய அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தார்கள்.
சுமார் 80 பேர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பிரபல கம்ப்ïட்டர் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் பணிபுரிபவர்கள் ஆவார்கள். அவர்கள் போலீசாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். இனிமேல் இது போன்ற தவறு செய்ய மாட்டோம் என்று கண்கலங்கியபடி கூறினார்கள்.
மன்னித்து விட்டனர்
இதனால் அவர்களை போலீசார் மன்னித்து விடுதலை செய்தனர். ஓட்டல் மானேஜர் வெங்கடபதி போலீசாரின் அனுமதியை தவறாக பயன்படுத்தி ஆபாச நடனம் ஆட அனுமதித்ததால் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டார்.
இந்த ஓட்டல் நிர்வாகத்தினர், மது விருந்து நடனத்துக்கு, ரூ.500 நுழைவு கட்டணம் வசூலித்துள்ளனர். பின்னர் ஓட்டலின் மேல் மாடியில் உல்லாசம் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு தனியாக ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது போல் சனிக்கிழமை ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.