சபரிமலை கோவிலுக்கு தடையை மீறி சென்ற புதுச்சேரி பெண் கைது
சபரிமலையில் புனிதமாக கருதப்படும் 18 படிகளிலும் ஏறியதோடு, ஐயப்ப சுவாமியின் சன்னதி வரை வந்த ஒரு இளம்பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தெய்வமாக வழிபடும் ஐயப்ப சுவாமி வீற்றிருக்கும் சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், மற்றும் எல்லா வயது ஆண்களும் சுவாமியை தரிசிக்கலாம். ஆனால், எல்லா பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்குமாறு சர்ச்சை நிலவி வருகிறது. கேரள அரசும் இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, பெண்கள் மட்டும் சபரிமலைக்கு செல்ல தனியாக நேரம் ஒதுக்கலாமா என்றும் பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில், சபரிமலை கோவிலின் நடைமுறையை மாற்றுவதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன் கன்னட நடிகை ஜெயமாலா, ஒரு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், `21 வருடங்களுக்கு முன்பு, தான் இளம் பெண்ணாக இருந்தபோது சபரிமலைக்கு சென்றதாகவும் அப்போது ஐயப்ப சுவாமியை தொட்டு தரிசித்ததாகவும்’ தெரிவித்தார். இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மேலும் சபரிமலையில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பணத்தை பெற்றுக் கொண்டு பெண்களை அனுமதிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் மண்டல பூஜையின் முதல் நாளான நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. எனவே, செய்தி சேகரிப்பதற்காக சபரிமலைக்கு நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் வந்திருந்தனர்.
போலீசுக்கு டிமிக்கி
அப்போது சபரிமலை கோவிலில் உள்ள `வலியநடப்பந்தல்’ என்ற இடத்தில், ஐயப்பனை தரிசிப்பதற்காக ஒரு இளம் பெண் நின்று கொண்டு இருந்தார். இதை கவனித்த போட்டோகிராபர் ஒருவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் செல்வி என்பதும், புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக புதுச்சேரியில் இருந்து வந்த பக்தர்கள் குழுவோடு அந்த பெண் வந்துள்ளார். சபரிமலையின் அடிவாரத்தில், பம்பையில் வைத்தே அந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எப்படியோ `டிமிக்கி’ கொடுத்து விட்டு மலை மீது ஏறி வந்து விட்டார்.
18 படிகள்
அது மட்டுமல்ல, பக்தர்கள் புனிதமாக கருதும் 18 படிகளையும் ஏறி கடந்து ஐயப்ப சுவாமி வீற்றிருக்கும் சன்னதி முன்பு வரை வந்துள்ளார். தடையை மீறி கோவிலுக்கு வந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட செல்வி, பம்பையில் உள்ள பெண் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை நடந்தது. பின்னர், அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து விட்டு விடுதலை செய்தனர்.
விசாரணை குறித்து தேவஸ்தான போலீசார் கூறுகையில், “தடையை மீறி கோவிலுக்குள் வந்த பெண், புதுச்சேரி மாநிலம் சேலபட்டூர் என்ற இடத்தை சேர்ந்தவர். அவர் தனது கணவருடன் சபரிமலைக்கு வந்துள்ளார். மேலும் இன்றுடன் (நேற்று) ஐந்தாவது முறையாக சபரிமலை ஐயப்பனை சந்திக்க முயற்சித்தாகவும் தெரிவித்தார்” என்றனர்.