வங்காளதேசப் புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலியா?; நூற்றுக்கணக்கானவர்களை தேடும் பணி நீடிப்பு
வங்காளதேசப் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்து விட்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி நீடித்து வருகிறது. வங்காளதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு `சிடர்’ என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் இந்த புயல் தாக்கியது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அலைகள் 5 மீட்டர் உயரத்துக்கு சீறி எழுந்தன. இந்த புயலால் ஏராளமான வீடுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. இதன் காரணமாகவும், வீடுகள் இடிந்து விழுந்ததாலும் ஏராளமானோர் பலியானார்கள். ஆனால் பலியானோர் எண்ணிக்கை 2,206 என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், மீட்புப்பணி இன்னும் முடிவடையாததால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயத்தில், பல இடங்களில் இருந்து சாவு தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருப்பதால், சாவு எண்ணிக்கை 10 ஆயிரமாக இருக்கலாம் என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. ஏராளமான பிணங்கள் நடு ரோட்டில் அழுகி கிடக்கின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
மீட்புப்பணி
கடலோர பகுதிகளில் வாழும் சுமார் 15 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், போர்வை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
புயல் தாக்கியதை தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்புப்பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள், கடற்படை படகுகள், ராணுவத்தினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வங்காள விரிகுடாவில் உள்ள தீவுப்பகுதிகளில் ஏராளமானோர் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை அழைத்து வர ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.
பிணங்கள் மிதந்தன
ஆனால் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு இடமே இல்லாமல், எங்கு பார்த்தாலும் தண்ணீராக இருந்ததால், மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. மீட்புப்பணி முடிவடைய சில நாட்கள் ஆகும் என்று கருதப்படுகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்த யானைகள் பயன்படுத்தப்பட்டன.
புயலுக்கு மான்கள் மற்றும் வன விலங்குகள் பலியாகின. அவற்றின் உடல்கள், கடலில் மிதந்தன. ஏராளமான இறால் பண்ணைகளும் அழிந்தன. கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள், கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு விட்டன. தொலைபேசி கம்பிகள் அறுந்து விழுந்தன.
நெற்பயிர் சேதம்
இந்த புயலால் சுமார் 5 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் முற்றிலும் சேதம் அடைந்தது. இவை சில நாட்களில் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருந்தன. இந்த நெற்பயிர்கள் அழிந்ததால், 6 லட்சம் டன் நெல் வீணானது.
இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் புயலால், கோதுமை, உருளைக்கிழமை மற்றும் எண்ணை வித்துகள் சாகுபடி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உதவி
புயல் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டவுடன், அமெரிக்க அதிபர் புஷ்சும், அவரது மனைவி லாராவும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வங்காளதேசத்துக்கு முதல்கட்டமாக 21 லட்சம் டாலர் நிதிஉதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் மீட்புப்பணியில் உதவுவதற்காக, 2 போர்க்கப்பல்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. வங்காளதேசத்தில் ஏற்கனவே முகாமிட்டுள்ள 18 பேர் கொண்ட அமெரிக்க மருத்துவ குழு, காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.