உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்…!!
சுசீந்திரம் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்கராஜா (வயது 48). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (37). வில்லிசை பாடகி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் வடசேரி கட்டையன் விளையில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் லிங்கராஜா பிணமாக மிதந்தார். அவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கயிற்றால் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தார்.
வடசேரி போலீசார் லிங்கராஜாவின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் லிங்கராஜாவின் மனைவி பிரேமாவுக்கும், பரமார்த் தலிங்க புரத்தைச் சேர்ந்த சங்கர் (29) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததும், இதற்கு லிங்கராஜா இடையூறாக இருந்ததால் சங்கர் அவரை கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து பிரேமா, சங்கர் ஆகியோரையும், சங்கருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் வேல்குமாரையும் (25) போலீசார் கைது செய்தனர்.
கைதான சங்கர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனது சொந்த ஊர் வடசேரி அருகே உள்ள பரமார்த்தலிங்க புரம் ஆகும். நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கும், வில்லிசை பாடகி பிரேமாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு பிரேமாவின் வில்லிசை நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் நானும் அங்கு சென்றேன்.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி நாங்கள் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். அப்போது குடும்ப விவரங்களை என்னிடம் கூறி பிரேமா மிகவும் வருத்தப்பட்டார்.
அவரது கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துவதாகவும், அவரால் எனக்கு எந்த பயனும் இல்லை என்றும் கூறினார். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். சமீபத்தில் பிரேமாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அப்போதும் லிங்கராஜா அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
மேலும் என் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் வந்து விட்டது. இதனால் எதாவது செய்ய வேண்டும் என பிரேமா கூறினார். இது தான் சமயம் லிங்கராஜாவை கொன்று விட்டால், பிரேமாவுடனான உல்லாச வாழ்க்கைக்கு எந்த தடையும் வராது என முடிவு செய்தேன்.
லிங்கராஜாவுக்கு சில மாந்திரீக வேலை தெரியும். சம்பவத்தன்று தோஷம் கழிக்க வேண்டும் என நைசாக பேசி லிங்கராஜாவை அழைத்தேன். அவரும் என்னுடன் வந்தார். வடசேரியில் உள்ள ஒரு மதுக்கடையில் 2 பேரும் மது அருந்தினோம். பின்னர் அவரை கட்டையன்விளையில் உள்ள பாழடைந்த கிணற்று பக்கம் அழைத்துச் சென்றேன். அங்கும் அவருக்கு மது கொடுத்தேன். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவரை நான் சரமாரியாக கத்தியால் குத்தினேன். போதையில் இருந்த அவரால் எதிர்த்து போராட முடியவில்லை. அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
அதன்பின் வீட்டுக்கு சென்று சாக்கு, கயிறு எடுத்து வந்தேன். வழியில் எனது நண்பர் வேல்குமார் வந்தார். அவருக்கு பணம் தருவதாக கூறி கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றேன். 2 பேரும் சேர்ந்து லிங்கராஜாவின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசினோம். ஆனால் எப்படியோ சாக்குமூட்டையில் இருந்து பிணம் வெளியே வந்து தண்ணீரில் மிதந்து விட்டது. மேலும் சம்பவ இடத்தில் லிங்கராஜாவின் செல்போன் கிடந்ததை நான் கவனிக்கவில்லை. அந்த செல்போன் மூலம் விசாரித்து போலீசார் என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வில்லிசைப்பாடகி பிரேமா வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனது கணவர் லிங்கராஜா ஒழுங்காக வேலைக்கு போக மாட்டார். நான் வில்லிசை நிகழ்ச்சி நடத்தி தான் எனது குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். அவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைப்பார். ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தேன்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வடசேரி பகுதியில் நடந்த வில்லிசை நிகழ்ச்சிக்கு சென்றபோது சங்கருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. எனது கணவர் என்னை சித்ரவதை செய்வதை அவரிடம் கூறி நான் அழுதேன். அவர் எனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். அவரது ஆறுதல் என்னை அவர் பக்கம் இழுத்தது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி வெளியூர்களில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தோம்.
இந்தநிலையில் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அப்போதும் எனது கணவர் என்னை அடித்து உதைத்தார். இதனால் அவரை மிரட்டி வைக்க வேண்டும் என்று சங்கரிடம் கூறினேன். சங்கரும் சரி என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் அவர் என் கணவரை கொலை செய்வார் என்று தெரியாது.
என் கணவரை கொலை செய்து விட்டு சங்கர் என்னிடம் வந்து சொன்னார். நான் அதிர்ச்சி அடைந்தேன். அதேசமயம் என்னை பிடித்த பீடை இதோடு ஓய்ந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். எனது கணவர் பிணத்தை கிணற்றுக்குள் வீசி விட்டதால் வெளியே தெரியாமல் போய் விடும். நாமும் சங்கருடன் உல்லாச வாழ்க்கை அனுபவித்து நிம்மதியாக வாழலாம் என முடிவு செய்து கணவர் கொலை செய்யப்பட்டதை வெளியில் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டேன்.
எப்போதும் போல் வில்லிசை நிகழ்ச்சிக்கு சென்றேன். எனது கணவர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சமயமும் நான் வில்லிசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். வில்லிசை பாடிக்கொண்டிருந்தபோது எனது மாமனார் எனக்கு போன் செய்து தகவல் சொன்னார். உடனே நான் வில்லிசையை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டுக்கு வந்து எதுவும் தெரியாததுபோல் நாடகமாடி கண்ணீர் விட்டு கதறினேன். எனது குடும்பத்தினரும், உறவினர்களும் என்னை நம்பினர்.
போலீசார் சங்கரை பிடித்து விசாரித்ததில் அவர் உண்மையை சொல்லி என்னையும் சிக்கவைத்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கைதான பிரேமா தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார். சங்கரும், வேல்குமாரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Average Rating