வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள்; விற்பனை மோசடி அம்பலம்… (இது எப்படி இருக்கு?) (வீடியோ)
வவுனியா வடக்கு, புளியங்குளம் வடக்கு பகுதியில் வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத் திட்ட வீடுகளில் மோசடி பல இடம்பெற்றுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த பகுதியில் வீடுகள் அற்ற பலர் இன்றும் கொட்டில்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்து தமக்கு ஒரு வீடு கிடைக்காதா என ஏங்கியவாறு அப் பகுதி கிராம அலுவலர் தனுஜா மற்றும் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆகியோரிடம் பல தடவை கேட்ட போதும் சாட்டுப்போக்குகள் கூறி அவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் புறக்கணிக்கபட்டுள்ளன.
ஆனால் அப் பகுதியல் நிரந்தர வீடுகள் உள்ள சிலருக்கும், அங்கு வசிக்காது வேறு இடங்களில் வசிக்கும் சிலருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை எந்த வகையில் வழங்கப்பட்டன என்பதை பிரதேச செயலகம் அப்பகுதி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக இந்திய வீட்டுத் திட்ட குடியேற்றம் உள்ள பகுதியில் 47 வீடுகள் உள்ள போதும் அவற்றில் 10க்கு மேற்பட்ட வீடுகள் மக்கள் அற்ற வீடுகளாகவும், சில வீடுகள் வாடகைக்கு விடப்பட்டவையாகவும் உள்ளன. மக்கள் வசிக்காத நிலையிலும், வாடகைக்கு விடுபவர்களுக்கும் கட்டாயம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கப்படத்தான் வேணுமா? இவர்களின் பயனாளிகள் தெரிவை தீர்மானித்தது என்ன..?
ஆனால் அக் கிராம அலுவர் பிரிவில் வசிக்கும் பலர் கைக்குழந்தைகளுடன், நோய்களுடனும் வீடின்றி அல்லப்படுகின்றனர். உறவினர்களின் வீடுகளில் பேச்சுக்களையும் திட்டுகளையும் வாங்கியவாறு காலத்தை கழிக்கின்றனர்.
இவை ஒருபுறமிருக்க, இந்திய வீட்டுத் திட்ட வீடுகள் விற்பனையும் செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் எமது இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அப்பகுதி கிராம அலுவர் தனுஜா அவர்களின் உறவினரான இராசதுரை தனபாலசிங்கம் மேல்மாடி வீடு, கடை, மில் என்பவற்றுடன் அப்பகுதியில் வசதியாக வாழ்கிறார். அவருக்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. வீடு இல்லாத பலர் அங்கு வீடு கேட்டு தினமும் கண்ணீர் விட்டு அழுகின்றனர். ஆனால் மேல்மாடி வீடு உள்ள ஒருவருக்கு வீட்டுத் திட்டம் வழங்கியமை எந்த வகையில் நியாயம்..? அவ்வாறு வழங்கப்பட்ட வீடு அவரது உறவினர் ஒருவருக்கு 8 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் ரூபாய் கைகளில் பணமாக வழங்கப்பட 6 இலட்சம் ரூபாய் சம்பத் வங்கியில் வீட்டு உரிமையாளர் பெயரில் விற்பனைக்கு முகவராக செயற்பட்டவரால் வைப்பிலிடப்பட்டுள்ளது. (வீடு விற்பனை செய்தமை தொடர்பான கடிதமும், வங்கி வைப்புச் சீட்டும் இணைக்கப்பட்டுள்ளது)
இதேபோன்று, கிராம அலுவலர் அவர்களின் அம்மம்மா இராசதுரை பரமேஸ்வரி (வயது 77) தனிமையில் இருந்துள்ளார். அவருக்கும் இந்திய வீட்டுத் திட்டம் கிராம அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது. அவர் இறந்தமையால் (இறந்து சில மாதங்களே) அவரது மகன் (மேல்மாடி வீடு உள்ளவர்) தற்போது அந்த வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார்.
இதேவேளை, அப்பகுதியில் இருவர், ஒருவர் என அங்கத்தவர்கள் உள்ளவருக்கு புள்ளிகள் காணாது என வீடு வழங்கப்படவில்லை. ஆனால் கிராம அலுவலரின் அம்மம்மா தனிமையில் இருந்த போதும் புள்ளிகள் வந்துள்ளது. அது எப்படி வந்தது..? இது நியாயமா..? மக்களே சொல்லுங்கள்.
இந்த மோசடிகள் இடம்பெற்றதில் இருந்து 10 மீற்றர் தூரத்தில் யானை சேதப்படுத்தியதாலும் இயற்கைக்கு தாங்க முடியாததாலும் தற்காலிக வீடு தரைமட்டமாகி விழுந்து 2 வருடம் கடந்தும் கூட நட்டஈடு உட்பட எந்தவித உதவியும் இல்லாமல் தமது பிள்ளையின் வீட்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் இ.தங்கராசா (வயது 84), த.சின்னம்மா (வயது 65) ஆகிய இருவரும் இவர்களின் கண்ணிற்கு தென்படவில்லையா? இவர்களின் வீடு இடிந்து விழுந்த போது பிரதேச செயலாளர் பரந்தாமன் கூட வந்து பார்வையிட்டுள்ளார். (அவர்களின் சோகக் கதை வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
கணவன் தடுப்பில் இருந்து வந்த நிலையில் வீடு இன்றி உறவினர் வீட்டில் பிள்ளையுடன் இருந்து கஸ்ரப்படும் ரங்கசாமி நித்தியானந்தன் குடும்பம், இரட்டைப் பிள்ளையுடன் வாய்கால் கரையோரம் தற்போது சமுர்த்தியால் வழங்கப்பட்ட ஓரு லட்சம் ரூபாய் வீட்டில் இருந்து வாழப் போராடும் சிவலிங்கம் கலைச் செல்வன் குடும்பம் என பல குடும்பங்களுக்கு இன்று வரை வீடு இல்லை. ஆனால் வீடு உள்ளவர்கள் பலர் வீட்டினைப் பெற்று விற்பனை செய்தும், வாடகைக்கு விட்டும் உழைத்து வருகின்றனர். இந்திய அரசாங்கம் உண்மையில் இந்த வீட்டுத் திட்டத்தைஇதுக்காகவா வழங்கியது..?
இந்த மோசடிகளுக்கு காரணம் யார்..? வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற பிரதேச செயலாளர் உடந்தையாக செயற்பட்டமைக்கான காரணம் என்ன…? தொடரும்…
இவை ஒருசில ஆதாரங்களே. எம்மிடம் இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை நாம் தொடர்ந்து வெளிப்படுத்துவோம்.
விரைவில் எதிர்பாருங்கள்…
கொடுக்க வேண்டிய பணத்திற்காக இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் கைமாறியதா…? உள்ளே நடந்த தில்லுமுல்லு…
Average Rating