சிக்கலில் சிக்கிய கால் சென்டர் காதல்!! காதலித்தார் – கர்ப்பிணியாக்கினார் – கல்யாணம் செய்ய மறுக்கிறார்; போலீஸ் கமிஷனரை சந்தித்து காதலன் மீது பட்டதாரி பெண் புகார்!
சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து, பட்டதாரி பெண் ஒருவர் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், `காதலித்து கர்ப்பிணியாக்கிய காதலரை திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்துள்ளார். சென்னை, பெரம்பூர் மரியநாயகம் 2-வது தெருவில் வசிப்பவர் மார்ஷல் வால்ஸ். இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிகிறார். இவருடைய மகள் வான்வால்ஸ் (வயது 21). பி.பி.ஏ. படித்துவிட்டு சென்னை தரமணியில் உள்ள கால்சென்டர் ஒன்றில் பணிபுரிகிறார். வான்வால்ஸ் நேற்று தனது பெற்றோருடன் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கண்ணீர் மல்க திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது:- நான் கடந்த 4 மாதங்களாக ஜோசப் சேவியோ அவினாஸ் (21) என்பவரை காதலித்து வருகிறேன். அவினாசும், நான் வேலைபார்க்கும் பகுதியில் உள்ள இன்னொரு கால்சென்டரில் வேலை பார்க்கிறார். வேலைக்கு போகும் போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம். அப்போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. அவினாஸ் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகினார். இதை நம்பி நானும் அவரோடு ஒன்றாக சுற்றித் திரிந்தேன். முட்டுக்காட்டில் உள்ள விருந்தினர் இல்லத்திற்கு அவர் என்னை அழைத்து சென்றார். விருந்தினர் இல்ல நிர்வாகிகளிடம் என்னை அவரது மனைவி என்று அறிமுகப்படுத்தினார். இருவரும் விருந்தினர் இல்லத்தில் தங்கினோம். அப்போது அவர் எனது பெற்றோர் நம்முடைய திருமணத்தை எதிர்க்கிறார்கள். அவர்களை சம்மதிக்க வைப்பதற்கு என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. அதன்படி, நாம் இப்போது கணவன்-மனைவி போல உல்லாசம் அனுபவிப்போம். அடிக்கடி சந்தித்து இதுபோல் உல்லாசம் அனுபவித்தால் நீ கர்ப்பம் தரிப்பாய். அதை வைத்து எனது பெற்றோரை மிரட்டி, சம்மதிக்க வைக்கலாம் என்று கூறினார். ஒருவேளை அதற்கு சம்மதிக்காவிட்டால், நாம் ரகசியமாக பதிவு திருமணம் செய்து தனி வாழ்க்கையை தொடங்குவோம் என்றும் கூறினார்.
இதை நம்பி என்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்தேன். அடிக்கடி எங்கள் சந்திப்பு இதுபோல் தொடர்ந்தது. இதன் விளைவாக, நான் இப்போது கர்ப்பமாக உள்ளேன். அவினாஸ் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார். திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக போலீஸ் நிலையத்தில் அவினாஸ் உறுதி அளித்தார். அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். முதலில் என்னை பதிவு திருமணம் செய்து கொள்வதாக அழைத்தார்.
ஏமாற்றினார்
நான் திருமண பதிவு அலுவலகத்தில் நாள் முழுக்க காத்திருந்தேன். ஆனால், அவர் வரவில்லை. அவரை, கால்சென்டரில் பணிபுரியும் இன்னொரு பெண்ணும் விரட்டி, விரட்டி காதலிக்கிறாள். அவரது பெற்றோரும், நண்பர்களும் எனக்கு எதிராக உள்ளனர். அவர் நல்லவர் தான். மற்றவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் தற்கொலைக்கு கூட முயன்றேன். எனது பெற்றோர் என்னை காப்பாற்றிவிட்டனர்.
தற்போது அவரது நண்பர்கள், என்னை போனில் பேசி மிரட்டுகிறார்கள். முகத்தில் `ஆசிட்’ வீசிவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். எனது காதலரை, எனக்கு மணம் முடித்து வைக்க உரிய ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு வான்வால்ஸ் கூறினார்.
அவர் கொடுத்த புகார் மனு உரிய விசாரணைக்காக செம்பியம் உதவி போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.