வங்காளதேசத்தை புயல் தாக்கியது; 1,200 பேர் பலி: மரங்கள் சாய்ந்தன; வீடுகள் தரைமட்டம்
மேற்கு வங்காளம், ஒரிசா மாநிலங்களை பயமுறுத்திக் கொண்டு இருந்த புயல், வங்காளதேசத்தை தாக்கியது. அப்போது ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. இதனால் 1,200 பேர் பலி ஆனார்கள், மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்தனர். வங்கக் கடலில் அந்தமான் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை உருவான `சிடர்’ என்ற புயல் வடக்கு நோக்கி நகர்ந்து ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை பயமுறுத்திக் கொண்டு இருந்தது. இதனால் அந்த மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புயல் பின்னர் சற்று திசைமாறி வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் வங்காளதேச அரசு முன்கூட்டியே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது. கடலோர பகுதிகளில் வசித்த சுமார் 6 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் நிலப்பகுதியை நெருங்க, நெருங்க வங்காளதேசத்தில் காற்றின் வேகம் அதிகரித்தது. சாகர் தீவுக்கு கிழக்கே வங்காளதேசத்தின் குல்னா-பரிசால் கடற்கரை பகுதியை நேற்று இரவு 11-30 அளவில் புயல் தாக்கியது. பின்னர் அது தலைநகர் டாக்கா வழியாக வடக்கு நோக்கி நகர்ந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. அப்போது கடலில் 15 அடி உயரத்துக்கு மேல் ராட்சத அலைகள் எழுந்தன.
வீடுகள் இடிந்தன
வங்காள தேசத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உள்ள குல்னா, பரிசால், பர்குணா, பிரோஜ்பூர், ஜலகதி, சத்கிரா, ஜெசோர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. அந்த மாவட்டங்களில் பயங்கர இரைச்சலுடன் வீசிய சூறாவளி காற்றினால் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. மின்சார கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் மற்றும் விளம்பர போர்டுகள் சாய்ந்தன.
காற்றின் வேகத்தையும் மழையையும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கடலோர மாவட்டங்களை புயல் புரட்டிப் போட்டு விட்டது.
1,200 பேர் பலி
வீடுகள் இடிந்து விழுந்ததிலும் வெள்ளத்தில் சிக்கியும் 1,200-க்கும் அதிகமான பேர் பலி ஆனார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பேர் காயம் அடைந்தனர். மேலும் ஏராளமான பேரை காணவில்லை. அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. சத்கிரா என்ற இடத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் சிலர் பலி ஆனார்கள்.
பேகர்பட் அருகே உள்ள தப்லசார் என்ற தீவில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் ஆவார்கள். அந்த தீவுக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை என அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோல் மேலும் பல தீவுகளுக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால் அங்குள்ளவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சுற்றுலா பயணிகள்
சிட்டகாங் மாவட்டத்தில் இருந்து 300 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற 1,000 மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களுடைய உறவினர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
செயிண்ட் மார்ட்டின் என்ற தீவுக்கு வெளிநாட்டினர் உள்பட நூற்றுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சென்று இருந்தனர். கடந்த 2 நாட்களாக அந்த தீவுக்கு கடற்படை தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை.
புயலின் தாக்குதலுக்கு தலைநகர் டாக்காவும் தப்பவில்லை. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நகரில் ஏராளமான மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்தன.
சுந்தரவன மாங்குரோவ் காட்டுப் பகுதியும் புயலின் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்குள்ள வனஇலாகா அலுவலகம் பலத்த சேதம் அடைந்ததாகவும் படகுகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புயல்-மழையின் காரணமாக வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் பள்ளிக்கூடங்களிலும் அரசு கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மின்சார `சப்ளை’ துண்டிப்பு
புயலின் கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் அந்த மாவட்டங்களில் மின்சார `சப்ளை’ துண்டிக்கப்பட்டு உள்ளது. தகவல் தொடர்பும் முற்றிலுமாக சீர்குலைந்து போய் உள்ளது.
இடைவிடாமல் பெய்த பேய் மழையால் வங்காளதேசத்தின் கடலோர மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
விமான போக்குவரத்து ரத்து
புயல்-மழையின் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. துறைமுகங்களிலும் பணிகள் ரத்து செய்யப்பட்டன. பஸ், ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மேற்கு வங்காள அரசு நிவாரண பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. ஐ.நா. சபை நிறுவனங்கள், உலக உணவு திட்ட நிறுவனம் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
பலவீனம் அடைந்தது
நிலப்பகுதிக்குள் புகுந்த பின் சிடர் புயல் பலவீனம் அடைந்தது. என்றாலும் மேற்கு வங்காளம், ஒரிசா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களிலும், திரிபுரா, மணிப்பூர், மிசோரம், அசாம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வடகிழக்கு மாநிலங்களில் நேற்று காற்றுடன் பலத்த மழை பெய்தது.