ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் அவர்களின் கருத்து..
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டவுடன் அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஏற்படும். தொடர்ந்து 2008ம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாத இடைவெளியில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம். இதற்கான சாத்தியக்கூறுகள் கூடுதலாகவுள்ளன. என சமூகசேவைகள் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்தவின் மூன்றாவது வரவுசெலவுத் திட்டம் நிச்சயமாக பெரும்பான்i ஆதரவுடன் நிறைவேற்றப்படும். இதில் சந்தேகமில்லை என்றும் அமைச்சர் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டால் நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்படலாமென்று கூறப்படுகிறது. இது சரியான தகவலா?? என்று அமைச்சர் டக்ளசிடம் செய்தியாளர் கேட்டதற்கு, வரவு செலவுத் திட்டத்தின் பின் அமைச்சரவையில் ஒரு பெரிய மாற்றம் இடம்பெறவுள்ளது. அதேவேளை மார்ச் ஏப்ரல் மாத இடைவெளியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என பதில் அளித்தார் அவர். நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அது வடக்கு கிழக்கில் சாத்தியப்படுமா என்று செய்தியாளர் கேட்டதற்கு, ஏன் சாத்தியப்படாது என நீங்கள் கருதுகிறீர்கள்? தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் கடந்த முறை போன்று கூட்டணியினரால் கள்ளவாக்குப் போட முடியாது. புலிகள் இந்த அரசு கவிழ்க்கப்படுவதை விரும்பவில்லை. தொடர்ந்து அரசைப் பலவீனப்படுத்த வேண்டும். பலவீனமான அரசு ஒன்று தொடர்ந்து இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்தப் போவதாக கூறப்படுகிறது. இது சாத்தியப்படுமா? உங்கள் நிலைப்பாடென்ன?? என்று செய்தியாளர் கேட்டதற்கு, அரசு அப்படித் தேர்தலை நடத்தினால், ஈ.பி.டி.பி உள்ளுராட்சிசபை தேர்தலில் போட்டியிடும். ஆனால் மாகாண சபைத் தேர்தலில்; போட்டியிடாது. இது கொள்கையளவில் எம்மால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று அமைச்சர் டக்ளஸ் பதிலளித்தார்.
அத்துடன் சர்வகட்சி பிரதிநிதிகள் கமிட்டியில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் அதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்றும் அவர் கூறியதோடு, தீர்வுக்கான மாற்றுத்திட்டம் ஒன்றையும் விபரித்தார். வடக்குக் கிழக்கிற்குத் தனித்தனியான இடைக்கால சபைகளை அமைக்கலாம். அதேவேளை பிரிவினையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வலியுறுத்தினால் இணைந்த இடைக்கால நிர்வாக சபையையும் உருவாக்கலாம். இந்தியாவும் அதனை ஆதரிக்கும்.
ஆனால் வடக்குக் கிழக்கும் இன்று சட்டரீதியாக பிரிக்கப்பட்டு விட்டன. இதனால் வடக்கு கிழக்கு இணைந்த இடைக்கால நிர்வாகசபை அமைப்பதை அரசாங்கம் நிராகரித்து விட்டது. எது எப்படியிருப்பினும் தனித்தனியாக வந்து இடைக்கால நிர்வாக சபைகளை உருவாக்கி அங்கு மக்களிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பதன் மூலம் பிரச்சினைகளை ஓரளவாவது தீர்க்க முடியும். எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.