அதிவேகமாக வாகனம் ஓட்டும்போது ஏற்படும் உயிர் இழப்பை கொலை குற்றமாகக் கருத முடியாது:சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Read Time:3 Minute, 15 Second

“அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்றதாலோ, அலட்சியமாக வாகனத்தை ஓட்டி சென்றதாலோ ஏற்படும் உயிர் இழப்பு கொலை குற்றமாக கருதப்படாது’ என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ம.பி.,யை சேர்ந்த நரேஷ் கிரி என்ற டிரைவர் 2004ம் ஆண்டு ஆகஸ்ட்டில், ஒரு பஸ்சை ஓட்டிச் சென்றார். ஆள் இல்லா லெவல் கிராசிங் வழியாக செல்ல முயன்றபோது, அதிவேகத்தில் ரயில் வந்து கொண்டு இருந்தது. பயணிகள் அனைவரும், விஷப்பரீட்சை வேண்டாம் என்று நரேஷ் கிரியை கேட்டுக் கொண்டனர். இருப்பினும், பஸ்சை வேகமாக ஓட்டி சென்றதால், விபத்து ஏற்பட்டு அதனால் இரண்டு பேர் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை கோர்ட்டில் நரேஷ் கிரி மீது, இந்திய தண்டனை சட்டம் 302வது பிரிவின்(கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் நரேஷ் கிரி மனு தாக்கல் செய்தார். அவர் மீது 302வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது சரியே என்று ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நரேஷ் கிரி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அர்ஜித் பசாயத் மற்றும் பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.


நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
வேகமாக வாகனத்தை ஓட்டி சென்றதாலோ, அலட்சியமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதாலோ, ஏற்படும் உயிர் இழப்பு கொலை குற்றமாக கருதப்படாது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய தண்டனை சட்டத்தின் 302வது பிரிவு பொருந்தாது. 304ஏ( வேகமாக அல்லது அலட்சியமாக வாகனத்தை செலுத்துதல்) பிரிவு தான் பொருந்தும். கொலை குற்றத்தை நிரூபிக்க, உயிர் இழப்பின் பின்னணியில் கிரிமினல் உள்நோக்கம் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த நிபந்தனை பொருந்தாவிடில் அது கொலை குற்றமாகாது. உள்நோக்கம் இல்லாமல் துணிகரமான செயலில் ஈடுபடும் போதோ, அலட்சியமாக செயல்படும் போதோ உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். எனினும், ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அல்லது தான் புரியும் செயலால் ஒருவர் உயிர் இழப்பார் என்பதை நன்கு அறிந்து இருந்தாலோ அது மனித கொலையாக கருதப்படும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தீபாவளிக்கு 15 கோடி எஸ்.எம்.எஸ்., வாழ்த்து : கோடிகளை குவித்த மொபைல் நிறுவனங்கள்
Next post நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் அட்டூழியம்: பெற்றோர் கண் எதிரில் சிறுமிகளை கற்பழித்தனர்- அகதிகளாக வெளியேறிய கொடுமை