இரு புலி உறுப்பினர்களை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி
படையினர்மீது தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்நடத்தி விமானப்படைக்குச் சொந்தமான 24கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டரை அழித்த புலி உறுப்பினர் ஆகிய இருவரைத் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதிவான் சம்பா ஜானகீ ராஜரட்ண நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார். புலிகளுக்கு கப்பல்மூலம் ஆயுதங்களைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் யாழ் தொண்டைமானாறு ராஜேந்திரன் கருணாகரன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு ஹெலிகொப்டரை அழித்ததாரெனக் கூறப்படும் அருளானந்தன் நிஷாந்தன் ஆகிய இரு புலி உறுப்பினர்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக் கொள்வனவின் பின்னர் அவற்றை விநியோகிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய புலிகளைக் கண்டறிய வேண்டியுள்ளதால் சந்தேகநபர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணைசெய்ய அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் அனுமதிகோரினர். பின்னர் வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதிவான் எதிர்வரும் 26ம் திகதி விசாரணைகளின் நிலைமை குறித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply